ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

கன்சல்டன்சி காமெடிகள்!

ட்ரிங் ட்ரிங்...

“ஹலோ”

“கிருஷ்ணனா?”

“ஆமாம். கிருஷ்ணன் தான் பேசுறேன். நீங்க?”

“நாங்க ப்ரைட் கன்சல்டன்சில இருந்து பேசுறோம்.”

“சொல்லுங்க”

“நீங்க வேறு வேலை தேடுவதாக, நாக்ரி தளம் மூலம் தெரிந்து கொண்டோம். உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு ஒன்று எங்களுடன் உள்ளது. உங்களுக்கு இதில் ஆர்வமுள்ளதா?”

“ஆமாம். ஒரு நிமிஷம். இடத்தில் இருந்து வெளியே வந்திடுறேன். ஆஆங்.... சொல்லுங்க”

“இது ஒரு முன்னணி பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். உங்களுக்கு இந்த வேலையில் எத்தனை ஆண்டு அனுபவம் உள்ளது?”

“ஆறு வருஷம்”

“உங்க தொழில்நுட்ப அனுபவங்களை பத்தி சொல்லுங்க?”

“நான் கடந்த ஆறு வருடங்களாக இணைய தொழில்நுட்பத்தில் வேலைப் பார்த்துவருகிறேன். தற்போது தொழில்நுட்ப அணித்தலைவராக இருக்கிறேன்.”

“உங்கள் வருடாந்திர சம்பளம்?”

“எட்டு லட்சம்”

“எவ்வளவு சம்பளம் எதிர்ப்பார்க்கிறீர்கள்?”

“பத்து லட்சம்”

“இந்த நேரத்தில் இது அதிகம். இருந்தாலும் முயற்சிக்கிறேன்.”

“சரி.”

“இந்த வேலை கிடைத்தால், எவ்வளவு நாட்களில் சேர முடியும்”

“ஒரு மாதம். என்னிடம் சில கேள்விகள் உள்ளது.”

”கேளுங்க”

“நான் வெளிநாட்டு பணியை எதிர்ப்பார்த்து இருக்கிறேன். அதற்கு வாய்ப்புள்ளதா?”

“கண்டிப்பா. நீங்கள் சேர்ந்த சில நாட்களில் வெளிநாடு அனுப்பப்படுவீர்கள்.”

“அதேப்போல், இனி நான் அதிகமாக மேலாண்மை பொறுப்பில் ஈடுபட எண்ணியுள்ளேன். பணி உயர்வு வாய்ப்பு எப்படி?”

“உங்கள் தகுதியை பார்க்கும் போது, நீங்கள் அதற்கு தகுதி உள்ளதாக தோன்றுகிறது. பிரகாசமான வாய்ப்பு உள்ளது”

“பணி சூழ்நிலை எப்படி? வேலை நேரம் என்ன? அதிக நேரம் வேலை பார்ப்பதில் தொந்தரவில்லை. ஆனால், அதுவே தொடர்ச்சியாக இருக்க கூடாதுல்ல. இங்க பார்த்தீங்க, நைட் பத்து மணிவரை இருக்க வேண்டி இருக்கிறது.”

“பணி சூழ்நிலை சிறந்த நிறுவனம் இது. பணி நேரம் இங்கு சிறப்பா நிர்வாகம் செய்யப்படுகிறது.”

“சரி சரி”

“வேறேதும் கேள்வி உள்ளதா?”

“இல்லை.”

“நேர்காணலுக்கு இந்த சனிக்கிழமை வரமுடியுமா?”

“ம்ம்ம்.... சரி. வருகிறேன். எங்கு?”

“டைடல் பார்க்.... ஏபிசி கம்பெனி”

“போன வைய்யா! நான் அங்கத்தான் வேலை பார்க்குறேன்.”

டொக்.

நீதி : என்ன வாங்குறோம்ன்னு தெரிஞ்சு, பேரம் பேசுங்க.

1 கருத்து:

சரவணகுமரன் சொன்னது…

http://www.saravanakumaran.com/2009/07/blog-post_31.html