திங்கள், 31 ஆகஸ்ட், 2009

ஐ.மு.கூ. அரசின் 100 நாட்கள்


மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து இன்றுடன் 100 நாட்களை பூர்த்தி செய்துள்ளது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

இந்த 100 நாட்களில் சில சிறந்த பணிகளை செய்துள்ளதாக பாராட்டப்படும் அதே நேரத்தில், போதுமான வறட்சி நிவாரண நடவடிகைகளை மேற்கொள்ளாதது,நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது , பாகிஸ்தானுடனான உறவில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியிருப்பது போன்றவை கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கின்றன.

குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்களை நிறைவேற்றியுள்ளதாக பெருமிதம் கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கூட கட்டுப்படுத்த தவறியது, ஒட்டு மொத்த நாட்டையே அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோயை பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிகை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விலைவாசி உயர்வுக்கு வித்திடும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதும் மன்மோகன் அரசுக்கு பொதுமக்களிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் குற்றவாளிகளை, நீதியின் முன் நிறுத்தச் செய்வதில் பாகிஸ்தானை பணிய வைக்க முடியாமல் திணறி வருவதும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆளுமை திறனை கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

அதிலும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா அலி கிலானியை, பிரதமர் மன்மோகன் சிங் கடந்த மாதம் எகிப்தில் சந்தித்துப் பேசிய பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையேயான பேச்சுவார்த்தையை தொடங்க பயங்கரவாத பிரச்னையை தொடர்புபடுத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்ததும்,அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கவனக்குறைவாக அந்த கருத்து இடம்பெற்றதாக இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் பின்னர் மழுப்பியதும் மன்மோகன் அரசு மீது படிந்த மற்றொரு களங்கமாகும்.

இவை தவிர அண்டை நாடான இலங்கை அரசு, போர் முடிவுக்கு வந்த பின்னரும் தமிழர்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பதை கண்டும் காணாமல் இருப்பதும், ராஜ பக்ச அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதும், நிதியுதவி அளிப்பதும்,தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை மீள் குடியமர்த்த இலங்கை அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் இருந்து எழுப்பப்படும் குரலை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதும் மன்மோகன் அரசுக்கு ஏற்பட்டுள்ள தீரா களங்கமாக அமைந்துள்ளது.

------- நனறி- தமிழ் வெப்துனியா .காம்

கருத்துகள் இல்லை: