திங்கள், 31 ஆகஸ்ட், 2009

நம்பர் பிளேட் குழப்பங்கள்!

நம்பர் பிளேட்டில் தங்கள் இஷ்ட தெய்வங்கள், அபிமான கட்சி சின்னங்கள், நியூமராலஜி, தொழில் விவரங்கள் உள்ளிட்டவைகளை கண்ணை பறிக்கும் வகையில் எழுதுவதை, ஆர்.டி.ஓ.,வும், போக்குவரத்து போலீசாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

விபத்தை ஏற்படுத்தி தப்புபவர்களையும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்கவும் நம்பர் பிளேட்கள் உயிர் நாடியாக உள்ளன. மோதும் வாகனத்தின் நம்பரை வைத்து எந்த வாகனம் மோதியது என அறிந்து, பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தர முடியும். ஆனால், சிலர் தங்கள் வாகன நம்பர் பிளேட்டுகளில், பிடித்த ராசி எண் மட்டும் பெரிதாக எழுதி, மற்ற எண்களை சிறிதாக எழுதுகின்றனர்.சிலர் இஷ்ட தெய்வங்கள் படங்களை மட்டுமின்றி, மின்வாரியம், தலைமைச் செயலகம், பிரஸ், போலீஸ், டாக்டர், வக்கீல் என்று பணிபுரியும் அலுவலகம் மற்றும் துறையின் பெயரை எழுதுகின்றனர். சிலர் காதலியின் பெயர்களையும், வினோத ஸ்டிக்கர்களையும் ஒட்டுகின்றனர்.

சிலர், நம்பரை டிராகுலா போன்று பலவித ஸ்டைலிலும், சாய்வாகவும், ஒளியை பிரதிபலிக்கும் வகையிலும்(ரிப்ளக்ட்) எழுதி நம்பரை கண்டுபிடிக்க முடியாமல் செய்து விடுகின்றனர். ஒரு சில தமிழ் ஆர்வலர்கள்(?) தமிழ் எழுத்துக்களை எண்களாக எழுதிக் கொள்கின்றனர்.பொதுவாக வாகனங்களின் நம்பர் பிளேட்டில், அனைத்து எண்ணையும் எப்படி எழுத வேண்டும், என்ன கலரில் எழுத வேண்டும் என்ற சட்டவிதிகள் உள்ளன. ஆனால் யாரும் இந்த விதிகளை கடைபிடிப்பதாக தெரியவில்லை.அதற்காகத்தான் மத்திய அரசு நம்பர் பிளேட்டில் நம்பரை மூன்று "இன்ச்'சுக்கு மிகாமலும் தடித்ததாகவும் எழுதப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

நம்பர் பிளேட்டில் கண்டபடி எழுதுபவர்களுக்கு, மோட்டார் வாகனச் சட்டம் 177ன்படி அபராதம் விதிக்க இடம் உள்ளது.பணம் உள்ளவர்கள் தங்கள் ராசி எண்ணைக் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். பணம் கொடுத்து பேன்சி நம்பர் வாங்க முடியாதவர்கள் தங்கள் இஷ்டம்போல் வாகனத்தில் எழுதிக் கொள்கின்றனர். ஒருக்கால் குற்றங்களில் ஈடுபட்டால் ,இந்தவாகனங்களை எளிதாக அறியமுடியாததால், குற்றவாளிகளும் தப்பித்து விடுகின்றனர்.எனவே, வாகனங்களின் உயிர் நாடியாக திகழும் நம்பர் பிளேட்டில் கண்டபடி எழுதுபவர்களை தடுத்து நிறுத்த ஆர்.டி.ஓ.,வும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இந்த பிரச்சனை இன்று சாதரணமாக தெரிந்தாலும் , இவற்றின் மூலம் எதுவும் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நடவடிக்கை எடுத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

----செ. சுந்தரராஜன்கருத்துகள் இல்லை: