திங்கள், 31 ஆகஸ்ட், 2009

புவி நிலையத்துடன் தொடர்பு இழந்தது சந்திரயான்???


நிலவைச் சுற்றிக் கொண்டு அது குறித்த பல்வேறு தகவல்களை கடந்த 312 நாட்களாக அளித்துக் கொண்டிருந்த சந்திரயான் 1 விண்கலம், நேற்று நள்ளிரவு புவி நிலையத்துடனான தொடர்பை இழந்தது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கூறியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 1 விண்கலம், நேற்றுவரை 3,400 முறை நிலவைச் சுற்றி வந்து பல தகவல்களை பெங்களூருவிற்கு அருகிலுள்ள பயலாலு புவி நிலையத்திற்கு அளித்து வந்தது. இறுதியாக நேற்று இரவு 12.25 மணிக்கு அது கடைசியாக தகவல் அனுப்பியது. அதன் பிறகு புவி நிலையத்துடனான தொடர்பை சந்திரயான் விண்கலம் இழந்துவிட்டதாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

புவி நிலையத்துடனான தொடர்பை இழந்ததையடுத்து சந்திரயான் 1 திட்டம் முடிவிற்கு வந்துவிட்டதாக, அத்திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுக் காலத்திற்கு திட்டமிடப்பட்ட சந்திரயான் 1 விண்கலத்தின் பணி 10 மாத காலத்திற்குள் முடிந்துவிட்டாலும், அது சாதிக்கவேண்டிய 90-95 விழுக்காட்டுப் பணிகளை துல்லியமாக நிறைவேற்றிவிட்டது என்று அண்ணாதுரை கூறினார்.

சந்திரயான் அனுப்பிய தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படுகிறது என்றும், அதன் துணை அமைப்புகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை அதனைக் கொண்டு ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திராயன் விண்கலத்தில் நிலவின் மேற்பகுதியை ஆராயும் டெர்ரைன் மேப்பிங் கேமிரா, நிலவின் பரப்பில் உள்ள கனிமங்களை ஆராயும் கருவி, அதன் காற்று வெளியை ஆராயும் ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜர் உள்ளிட்ட பல கருவிகள் பொறுத்தப்பட்டு ஆய்வு செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன் திட்டத்துக்கு தலைமை வகித்த அண்ணாதுரை தமிழ்நாட்டுக்காரர் என்பதுகுறிப்பிடத்தக்கது!!!!


கருத்துகள் இல்லை: