வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

கந்தசாமி விமர்சனம்


கந்தசாமி


இந்தியர்கள் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணம் ஏறக்குறைய அறுபத்தைந்து லட்சம் கோடிகள். உலகின் மொத்த ஏழைகளில் முப்பது சதவீதம் பேர் இந்தியர்கள். பதுக்கி வைத்திருக்கும் பணத்தை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தால் ஏற்றத் தாழ்வு நீங்குமே என்று சிபிஐ அதிகா‌ரி ஒருவருக்கு தோன்றினால் என்ன நடக்கும்...? அதுதான் கந்தசாமி.


நடைமுறையில் இருக்கும் பிரச்சனையை நடைமுறைக்கு சாத்தியமில்லாத வழிகளில் தீர்வு காணும் ஜென்டில்மேன், முதல்வன், ரமணா, அந்நியன், சிவா‌ஜி படங்களின் வ‌ரிசையில் புதிதாக சுசி.கணேசனின் கந்தசாமி.

இதுபோன்ற படங்களில் பார்வையாளர்களின் உணர்வுகளை உச்ச நிலைக்கு கொண்டு செல்லும் திரைக்கதை, காட்சிகள் முக்கியம். கதாபாத்திரங்களின் ஸ்கின் டோனைகூட கணிக்க முடியாத கந்தசாமியில் உணர்வுபூர்வமான அத்தகைய காட்சிகள் இல்லாதது மிகப் பெ‌ரிய குறை.

படத்தின் கதைக்கு வருவோம். திருப்போரூ‌ரில் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது கஷ்டத்தை பேப்ப‌ரில் எழுதி அங்குள்ள மரத்தில் கட்டி தொங்கவிடுகிறார்கள். அவர்களின் கஷ்டம் எதுவாக இருந்தாலும் அது உடனே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த அதிசயத்துக்கு காரணம் கந்தசாமி கடவுள் என்று ப‌ரிபூரணமாக நம்புகிறார்கள் பொது ஜனங்கள்.

கந்தசாமி கஷ்டப்படும் ஜனங்களுக்கு அள்ளித் தருவது கரன்ஸி என்பதால் இது சாமியின் வேலை அல்ல ஏதோ ஆசாமியின் வேலை என்று களத்தில் இறங்குகிறார் காவல்துறை அதிகா‌ரி பிரபு. ஆள், அம்புடன் அவர் துப்பு கிடைக்குமா என்று திணறிக் கொண்டிருக்க, இதற்கெல்லாம் காரணம் சிபிஐ அதிகா‌ரி கந்தசாமிதான் என இருந்த இடத்திலேயே தெ‌ரிந்து கொள்கிறார் ஸ்ரேயா. எப்படி...?

ஸ்ரேயாவின் தந்தை பிபிபி (ஆசிஷ் வித்யார்த்தி) மிகப் பெ‌ரிய கோடீஸ்வரர். அவரது வீட்டை சோதனையிட்டு, முக்கியமான டாக்குமெண்ட்டுகள் அனைத்தையும் கைப்பற்றுகிறது விக்ரம் அண்டு கோ. இந்த சிக்கலிலிருந்து தப்பிக்க பக்கவாதம் வந்ததுபோல் நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. தனது அப்பாவின் நிலைக்கு விக்ரம்தான் காரணம் என்று அவரை பழிவாங்க முயற்சிக்கிறார் ஸ்ரேயா. இந்த நேரத்தில் டிவி-யில் கந்தசாமி கடவுளின் மகிமை பற்றி ஒளிபரப்புகிறார்கள். ஒன்றும் ஒன்றும் இரண்டு... அந்த கந்தசாமிதான் இந்த கந்தசாமி. கண்டுபிடித்து விடுகிறார் ஸ்ரேயா.

விக்ரம்தான் கந்தசாமி என்பதை பிரபுவும் கண்டுபிடித்து அவரை நெருங்கும்போது, ஸ்ரேயாவின் சூழ்ச்சியால் ஆசிஷ் வித்யார்த்தியிடம் மாட்டிக் கொள்கிறார் விக்ரம். அதன் பிறகு மெக்சிகோ செல்லும் கதை, தமிழகத்துக்கே ரோல் மாடலாக திகழும் பணக்கார வில்லன் என யு டர்ன் அடித்து சின்ன அட்வைஸுடன் முடிகிறது.

கொக்கரக்கோ சேவல் சவுண்டுடன் மன்சூர் அலிகானை புரட்டியெடுக்கும் விக்ரமின் அறிமுகம் நிறைய எதிர்பார்க்க வைக்கிறது. அவர் சூப்பர்மேனெல்லாம் இல்லை, நண்பர்களின் உதவியால் ரோப் கட்டிதான் பறக்கிறார் என்ற விளக்கம் பகுத்தறிவுக்கு உவப்பாக இருந்தாலும் படத்தின் டெம்போவுக்கு கசப்பாக அமைகிறது. சிபிஐ அதிகா‌ரியாக டிப் டாப் மீசையில்லா விக்ரம் டாப். சார்லி அண்டு கோ-வை பயமுறுத்த போடும் பெண் வேசம் நம்மையும் பயமுறுத்துகிறது. படத்தின் சீ‌ரியஸ் மூடுக்கு இயக்குனர் வைத்த சிதை அது.


ஸ்ரேயாவின் முகத்தைவிட இடை நன்றாக நடிக்கிறது, ஸா‌ரி... வெடிக்கிறது. சி‌ரித்துக் கொண்டே விக்ரமை கவிழ்க்க நினைக்கும் அவரது கதாபாத்திரம் குலுமணாலி ‌ஜில். விக்ரமின் அறையில் தனது உடையை கிழித்துக் கொண்டு காப்பாத்துங்க என்று நாட்டிய ஸ்டைலில் நெ‌ளிகிறாரே... இளசுகள் தொலைந்தார்கள். அப்பாவின் நாடகம் பு‌ரிந்து விக்ரமை நிஜமாக காதலிக்கும் போது தமிழ் சினிமா ஹீரோயினுக்கான அவரது ரோல் முழுமையடைகிறது.

பிரபுவுக்கு அலட்டலில்லாத போலீஸ் அதிகா‌ரி வேடம். விக்ரமும் அவரது பால்யகால நண்பர்களும் பதுக்கல் பணத்தை ஏழைகளுக்கு கொடுப்பதற்காக சொல்லப்படும் காரணத்தில் வலுவில்லை. மெக்சிகோ எபிசோட் எதற்கு? அங்கு நடக்கும் பண பட்டுவாடாவை பு‌ரிந்துகொள்ள தனித் திறமை வேண்டும். சொகுசு பேருந்தில் குட்டி குளியலறை, குஷன் படுக்கை என சிட்டியை வலம்வரும் வில்லன் ஜெய்சங்கர் படத்தை நினைவுப்படுத்துகிறார்.

புட்டே‌ஜில் வடிவேலுவின் காட்சிகளில் கைவைத்து விட்டார்கள் போல. திடீரென துண்டு துண்டாக வந்துவிட்டுப் போகிறார் வைகைப் புயல். நான்தான் கந்தசாமி என சேவல் கெட்டப்பில் அவர் காட்டும் மேன‌ரிசம் ரகளை. போலீஸ் ஸ்டேசனில் அவருக்கு நடக்கும் வாட்டர் ட்‌‌ரீட்மெண்டுக்கு கோலி சோடாவை குலுக்கி உடைத்த மாதி‌ரி தியேட்ட‌ரில் பொங்கி சி‌ரிக்கிறார்கள்.

பாடல்களில் பாஸ் மார்க் வாங்கும் தேவிஸ்ரீ பிரசாத் பின்னணி இசையில் கோட்டைவிடுகிறார். ஆ‌க்சன் படம் என்றால் காட்சிக்கு காட்சி கொட்டி முழக்க வேண்டுமா வாத்தியங்களை? காஸ்ட்யூமருக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ். ஸ்ரேயாவின் உடையில் மறைப்பதைவிட வெளிப்படுத்தும் பகுதி அதிகம். நுணுக்கமும்கூட.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ஏமாற்றம். விக்ரமின் அறிமுக காட்சியில் பத்து வினாடிக்கு ஒருமுறை லைட்டிங் மாறுகிறது. சில காட்சிகளில் மஞ்சள் காமாலையோ என சந்தேகப்படும் அளவுக்கு எங்கும், எதிலும் மஞ்சள் மயம். சில பாடல் காட்சிகளில் திரை பளீரென்று இருக்க நடிகர்களை தேடிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

சிபிஐ அதிகா‌ரி விக்ரம் படம் முழுக்க பணக்காரர்கள் வீட்டில் ரெய்டு செய்கிறார். இன்கம் டாக்ஸ்காரர்களின் வேலையல்லவா அது? விக்ரமின் ராபின் ஹுட் வேலைக்கு அவரது மேலதிகா‌ரி முதற்கொண்டு அனைவரும் உடந்தையாக இருக்கிறார்கள். வித்யார்த்தியின் ஆட்கள் கியூ பிராஞ்ச் அதிகா‌ரிகள் என்றதும் விக்ரம் அப்படியே நம்புவதும், அவர்களின் கற்பழிப்பு மிரட்டலுக்கு அடங்கிப் போவதும் விக்ரமின் இன்டலக்சுவல் கேரக்டருக்கு விழுந்த அடி.

ரமணா முதல் சிவா‌ஜி வரை பலப் படங்களின் சாயலும், திரைக்கதையின் பலவீனமும், லா‌ஜிக் மீறல்களும் நிறைந்த கந்தசாமி... ஹைடெக் கந்த(ல்)சாமி.

கருத்துகள் இல்லை: